தி.ரா.திருவேங்கடம், துடியலூர், கோவை
"அமேதி எங்களின் புனித பூமி' என்கிறார் பிரியங்கா காந்தி. ஆனால் ராகுலோ வயநாட்டிலும் போட்டியிட்டு புண்ணிய பூமியை அவமதித்துவிட்டாரே?
கங்கையை புனித நதி என்கிறோம். அது சுத்தமாகவா இருக்கிறது? அதைத் தூய்மைப்படுத்துவதாக பா.ஜ.க. அரசு திட்டம் தீட்டி பணத்தைக் கொட்டியதே, அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
சாதாரண, சாமான்ய மக்களெல்லாம் இனி தேர்தலில் நிற்பதும் ஜெயிப்பதும் பகல் கனவுதானா?
செல்வாக்கு மிகுந்தவரான தொழிலதிபர் கோயங்கா, தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் இருந்தபடி துண்டறிக்கைகளை வீசி மக்களைக் கவர்ந்தார். அவர் எதிர்த்து நின்ற தமிழ் ஆர்வலர் திருக்குறள் முனுசாமிக்கு பணபலமோ படைபலமோ இல்லை. ஆனால், தேர்தல் முடிவுகளில் திருக்குறள் முனுசாமிதான் வென்றார். "ஓட்டுக்கு நோட்டு' என்கிற தற்போதைய ஃபார்முலா எந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறதோ அப்போது மீண்டும் அந்தக் காலம் திரும்பும். சாதாரணமானவர்கள் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் செல்லலாம்.
நித்திலா, தேவதானப்பட்டி
ஆசிய தடகளப்போட்டியில் சாதனை புரிந்திருக்கிறாரே தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்க மங்கை கோமதி?
விளையாட்டுத்துறைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது என்பது இந்தியாவில் மிகவும் சவாலான செயல். அதுவும், தடகளப் போட்டி என்பது சில நொடிகளில் அல்லது ஓரிரு நிமிடங்களில் நிறைவடையக்கூடியது. அதில் வெற்றி பெற உடல்திறனும் கடும் பயிற்சியும் வேண்டும். திருச்சி அருகே முனிகண்டம் என்ற சின்ன ஊரிலிருந்து தன் தந்தையின் சைக்கிளில் நகரத்திற்கு நாள்தோறும் வந்து, மைதானத்தில் பயிற்சி பெற்ற சமூக-பொருளாதாரச் சூழலில் மிகவும் ஒடுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த கோமதி, இந்தியாவுக்கான முதல் தங்கத்தை தனது 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பெற்றிருப்பது மகத்தான சாதனை. விளையாட்டுத்துறையில் 30 வயது என்பது ரிடையர்டை நெருங்கும் வயது. அந்த வயதில் இந்த அபாரத்தை நிகழ்த்திப் பெருமை சேர்த்திருக்கிறார் கோமதி. 1500 மீ. ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை தக்க வைத்திருக்கிறார் சித்ரா. அவர்கள் வெற்றி பெற்ற அதே தோஹா நகரில் 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற புதுக்கோட்டை சாந்தி, தனக்கு நேர்ந்த அவலங்களைக் கடந்துவர 10 ஆண்டுகள் ஆயின. இப்போது அவர் பயிற்சியாளராக இருந்து பல சாந்திகளை உருவாக்குகிறார். சாந்திக்கு ஏற்பட்ட கசப்பான சூழல்கள் கோமதிக்கு இருக்காது, இருக்கவும் கூடாது. இவர் இன்னும் பல கோமதிகளை உருவாக்க வேண்டும்.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ஹிட்லர் சாவு மர்மம்... ஜெயலலிதா மரண மர்மம்...?
யுத்தக் களத்தில் தனக்கு தோல்வி நெருங்கி வருகிறது எனத் தெரிந்தவுடன் பதுங்குகுழிக்குச் சென்றவன் ஹிட்லர். தேர்தல் களத்தில் "கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிரிகளே இல்லை' என்றவர் ஜெயலலிதா. எதிரிகளால் அழிக்கப்படாமல் தன்னை மாய்த்துக்கொண்டவன் ஹிட்லர். ஜெயலலிதா மரணத்திற்கும் அவரது அரசியல் எதிரிகள் காரணமில்லை.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
உலகக்கோப்பை கிரிக்கெட் அணி தேர்வு எப்படி?
கட்சிகளின் வேட்பாளர் தேர்வு போலத்தான். பல வழிமுறைகளில் தேர்வு செய்யப்படுவதால் விமர்சனங்கள் எழவே செய்யும். இறுதியில், வெற்றியா தோல்வியா என்ற முடிவுதான் அணியின் உண்மையான பலத்தைக் காட்டும்.
__________
காந்திதேசம்
சி.கார்த்திகேயன், சாத்தூர்
காந்தியை "தேசத் தந்தை' என்று அழைத்துக்கொண்டே அவர் படம் போட்ட ரூபாய் நோட்டை லஞ்சமாகத் தருவதும் பெறுவதும் அவருக்கு செய்யும் துரோகம் இல்லையா?
உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக இருப்பவர் காந்தி. அதனால்தான், தேசத்தந்தை என்று மதிக்கப்படுவதுடன் இந்திய ரூபாய் நோட்டில் அவரது படமும் அச்சிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுக்கு காந்தி படத்தால் மதிப்பு எதுவும் கூடிவிடப் போவதில்லை. அது செய்யப் போகிற "காரிய'த்துக்குத்தான் மதிப்பு. காய்கறி வாங்குவதற்காக 50 ரூபாய் செலவிடுகிறவர்களும் உண்டு. தேர்தலுக்குப் பிறகான "லாப'ங்களை எதிர்பார்த்து 50 கோடி ரூபாயை செலவழிக்கும் வேட்பாளரும் உண்டு. அவரவர் தேவை, அதனை அடைவதற்கான வழி இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ரூபாய் நோட்டுப் பயன்படுத்தப்படுகிறது. அதுவேதான் லஞ்சமாக ரூபாய் நோட்டைக் கொடுக்கும்போதும் பெறுகின்றபோதும் நடக்கிறது. லட்சுமி படம் போட்ட பட்டாசை வெடித்துச் சிதறடிப்பதால், தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு பக்தி இல்லை என்று சொல்லிவிடமுடியுமா? அடையாளமாகக் கையாளப்படுவதைவிட அவசியத்திற்காகக் கையாளப்படுவதுதான் பணம்.
அரசியல் களத்தில்-பொதுவாழ்வில்-ஏன் வணிகத்தில்கூட நேர்மையை, ஒழுக்கத்தை வலியுறுத்தியவர் காந்தி. அவரது படம் போட்ட ரோஸ் நிற, பச்சை நிற, ஆரஞ்சு நிற, நீலநிற நோட்டுகள் இந்த முறை தேர்தல் களத்தில் பரவலாக விநியோகிக்கப்பட்டு ஓட்டுகள் விலை பேசப்பட்டன. அவற்றைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்களும் நிறையபேர் உண்டு. பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியபோது, அதனை வெளிப்படையாகச் சொல்லாமல் ‘"புத்தர் சிரித்தார்'’ என சமிக்ஞையாகக் குறிப்பிட்டார்கள். அதுபோல, இந்திய தேர்தல் களத்தில் -குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்களின் கைகளில் "காந்தி சிரித்தார்'. அவர் வலியுறுத்திய நேர்மை-ஒழுக்கம் இவற்றுடன் ஜனநாயகமும் சிரிப்பாய் சிரித்தது.